பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
|கோட்டுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
காரைக்கால்
கோட்டுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
அசுத்தமான குடிநீர்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜீவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மஞ்சள் நிறத்தில் வந்ததால் அந்த தண்ணீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு அசுத்தமான குடிநீர் குடித்ததால் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அதுபோன்ற நிைலமை தற்போதும் ஏற்பட்டு விடுமோ? என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
லாரிகள் மூலம் வினியோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சிவனேசனிடம் விசாரித்தனர். அப்போது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது அடிப்பகுதியில் உள்ள சேறு குழாய் வழியாக வந்து விடுவதாகவும், அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கிணற்று நீரை இனி வினியோகம் செய்ய வேண்டாம், மற்ற பகுதியில் எவ்வாறு வழங்கப்படுகிறதோ அதே முறையில் வழங்கவும், அதுவரை டேங்கர் லாரியில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி டேங்கர் மூலம் ஜீவாநகர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.