பழங்கால சுடுமண் உறை கண்டுபிடிப்பு
|வில்லியனூர் அருகே பழங்கால சுடுமண் உறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே பழங்கால சுடுமண் உறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுடுமண் உறை
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் பகுதியில் உள்ள வெள்ளேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழமாக மண் எடுத்துள்ளனர். அப்போது அங்கு பழங்கால சுடுமண் உறை தென்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அங்கு மண் எடுக்காமல் சென்று விட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி, தட்சணாமூர்த்தி, ராஜசேகர், செல்வ முருகன் ஆகியோர் அப்பகுதி வழியாக இன்று சென்றனர். அப்போது அங்கு நீண்ட உறை மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த உறையை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
இறந்தவர்களின் உடலை...
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'இந்த உறை பழங்காலத்தில் முன்னோர்கள் இறந்தவர்களின் உடலை இந்த உறையினுள் போட்டு புதைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அது போன்று கடந்த காலங்களில் இந்த ஏரியில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட உறையாக இருக்கலாம். இதுபற்றி தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால் தான் இதன் உண்மையான வரலாறு தெரிய வரும்' என்று தெரிவித்தார். தொண்டமாநத்தம் பகுதியில் பழமையான உறை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.