சென்டாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
|மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சென்டாக் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் புதுவையில் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் அக்டோபர் மாதம் கலந்தாய்வுகளை நடத்தி சென்டாக் நிர்வாகம் சேர்க்கை ஆணை வழங்கி வருகிறது. அதாவது அரசு இடஒதுக்கீட்டின் கீழ் 46 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 305 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தர்ணா
இந்தநிலையில் சென்டாக் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கேட்டறிய இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்டாக் அலுவலகத்துக்கு வந்துள்ளனர்.
ஆனால் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை என்று தெரிகிறது. மேலும் அதிகாரிகள் சென்டாக் அலுவலகத்தின் எதிரே தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள் சென்டாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துபோக செய்தனர்.