< Back
புதுச்சேரி
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 July 2022 11:43 PM IST

காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்து புதுவையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

புதுச்சேரி

காங்கிரஸ் எம்.பி.யை கண்டித்து புதுவையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி திரவுபதி முர்முவை தரம்தாழ்த்தி விமர்சனம் செய்த மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி.யை கண்டித்தும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவை மாநில பா.ஜ.க. சார்பில் இந்திராகாந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

உருவ பொம்மை எரிக்க முயற்சி

ஆர்ப்பாட்டத்தின்போது ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்.பி.யின் உருவ படத்தை பா.ஜ.க.வினர் தீ வைத்து கொளுத்தினர். அப்போது சிலர் திடீரென அவரது உருவ பொம்மையை எடுத்துவந்து அதற்கு தீ வைக்க முயற்சித்தனர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று உருவ பொம்மையை பறித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் அந்த உருவ பொம்மையை அங்கிருந்து போலீசார் எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்