80 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு
|போக்குவரத்துத்துறையினர் நடத்திய வாகன தகுதி பார்ப்பில் 80 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புதுச்சேரி
போக்குவரத்துத்துறையினர் நடத்திய வாகன தகுதி பார்ப்பில் 80 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிறப்பு முகாம்
புதுவையில் மாணவ, மாணவிகளை பள்ளி, கல்லூரிக்கு ஏற்றி செல்ல பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்களை ஆண்டுதோறும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர்.
வாகனங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்த சிறப்பு முகாம் நடந்து முடிந்துள்ளது.
40 வாகனங்கள்
இந்தநிலையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில் 2-வது முறையாக சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. வட்டார போக்குவரத்து அதிகாரி சீத்தாராமராஜூ முன்னிலையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த முகாமில் 40 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் ஒரேயொரு வாகனத்தில் மட்டும் குறைகள் கண்டறியப்பட்டு அதை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டது. மற்ற வாகனங்கள் மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
80 வாகனங்களில் குறைபாடு
புதுவை பகுதியில் 985 வாகனங்கள் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றன. இதில் இதுவரை சோதனையில் கலந்துகொண்டு 600 வாகனங்கள் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. 80 வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டு அதை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி அறிவுறுத்த போக்குவரத்துத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.