< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தாளாளர், ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல்
|2 Feb 2023 11:21 PM IST
தனியார் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தாளாளர் மற்றும் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியருக்கு போலீசார் வலைவீச்சு
பாகூர்
வில்லியனூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 40). இவர் பாகூர் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளி அருகே மணிமாறன் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மணிமாறன் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆசிரியர்களை தரக்குறைவாக திட்டி பள்ளியை மூடிவிட்டு செல்லுங்கள், இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகி குப்பம்மாள் பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்த பேராசிரியர் மணிமாறனை வலைவீசி தேடி வருகின்றனர்.