பழுதான போக்குவரத்து சிக்னல்கள் 3 மாதத்தில் சீரமைக்கப்படும்
|பழுதான அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் 3 மாதத்தில் சீரமைக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி
பழுதான அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் 3 மாதத்தில் சீரமைக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சாலை பாதுகாப்பு குழு கூட்டம்
6-வது சாலைப் பாதுகாப்பு குழுக்கூட்டம் இன்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலாளர்கள் முத்தம்மா, மணிகண்டன், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், போலீஸ் டி.ஜி.பி., ஶ்ரீனிவாஸ், போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிக்னல்கள்
கூட்டத்தில் தற்போது புதுச்சேரியில் உள்ள போக்குவரத்து நெரிசல், அதனை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பல்வேறு வகையான செயல்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பழுதான அனைத்து போக்குவரத்து சிக்னல்களை சரி செய்வது மற்றும் புதிய போக்குவரத்து சிக்னல்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. சாலை மேம்பாட்டு பணிகளான முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரிவுகளில் வேகத்தடைகளை அமைப்பது, ஒளிரும் பொத்தான்கள், பிரதிபலிப்புப் பலகைகள், அடையாள பலகைகள் அமைப்பது போன்றவை விவாதிக்கப்பட்டது.
3 மாதங்களுக்குள்...
மாநில, மாவட்ட மற்றும் கிராமப்புற சாலைகளில் கவனம் செலுத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த மேம்பாட்டு செயல்பாடுகளை 3 மாதங்களுக்குள் அதிக முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.