தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புகை வந்ததால் பரபரப்பு
|புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நின்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென்று புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி
புதுச்சேரி ரெயில் நிலையத்தில் நின்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து திடீரென்று புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாதர் எக்ஸ்பிரஸ்
புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு தாதர் சென்டரல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு நேற்று இரவு 7.15 மணிக்கு தாதர் சென்டரல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
ரெயில் பெட்டி தீ?
இந்தநிலையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அலறியடித்துக்கொண்டு அங்கு விரைந்து சென்றனர். இதனை பார்த்த பயணிகளும் பதற்றம் அடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்தபோது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.
ரெயில்வே போலீசார் விசாரணை
மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்துவிட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.