பயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும்
|காரைக்காலில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை விரைவில் வழங்கப்படும் என வேளாண் அதிகாரி தெரிவித்தார்
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை சார்பில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று காலை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார், கடந்த மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு பிறகு, 230 விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை கையொப்பம் ஆகியுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அவரவர் கணக்கில் தொகை வந்து சேரும் என்றார். மேலும், 437 விவசாயிகளுக்கு காப்பீட்டு நிலுவை தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், காரைக்கால் மாவட்டத்திற்கான உரிய காவிரி நீரை, உரிய நேரத்தில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இயங்காத பாசிக் ஆழ்துளை கிணறுகளை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.