வாட்ஸ் அப்பில் 'லிங்க்' அனுப்பி தகவல் திருடும் ஆசாமிகள்
|வாட்ஸ் அப்பில் ‘லிங்க்’ அனுப்பி நூதனமுறையில் தகவல்கள் திருடப்பட்டுகிறது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி
வாட்ஸ் அப்பில் 'லிங்க்' அனுப்பி நூதனமுறையில் தகவல்கள் திருடப்பட்டுகிறது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பண மோசடி
நாடு முழுவதும் சமீப காலமாக செல்போன் செயலிகளை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பண மோசடி நடக்கிறது. வேலைவாய்ப்புகள், ஆன்லைன் வர்த்தகம், குறைந்த நாட்களில் பணம் இரட்டிப்பு, கிரிப்டோகரன்சி முதலீடு, பழைய பொருட்கள் விற்பனை என பல்வேறு விளம்பரங்கள் வெளியாகின்றன.
இதனை நம்பி அதில் வரும் 'லிங்க்' அழுத்தி உள்ளே செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து மர்ம ஆசாமிகள் பண மோசடி செய்கின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் கூறியிருப்பதாவது:-
தகவல்கள் திருடப்படும்
சமீப காலமாக வாட்ஸ்-அப்பில் 'டாடா மோட்டார்ஸ் 15-ம் ஆண்டு' என்று வருகின்ற லிங்கை யாரும் தொட வேண்டாம். மேலும் அதில் வரும் பிங்க் வாட்ஸ்அப் என்ற லிங்கையும் தொட வேண்டாம். மற்றவர்களுக்கும் பகிரவும் வேண்டாம். அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் மிக எளிதில் ஹேக் செய்யப்பட்டு வாட்ஸ் அப் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டும். மேலும் செல்போனும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும்.
பிங்க் வாட்ஸ்அப் அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத, தேவையில்லாத நபர்கள் அனுப்பும் எந்த லிங்கையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டாம். அப்படி செய்வதனால் ஏபிகே எனும் பைல் உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.