தகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு
|நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்த ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வங்கி அதிகாரி
திருநெல்வேலியை சேர்ந்தவர் சங்கரநாராயணன். மங்களூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு கிருமாம்பாக்கத்தில் ரூ.7½ லட்சம் மதிப்பில் 2 மனைகள் வாங்கி பாகூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் வாங்கிய மனைகள் ஏலம் விடப்பட உள்ளதாக வங்கி வெளியிட்ட அறிவிப்பை கண்டு சங்கரநாரயணன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி விசாரித்தபோது, அவர் வாங்கிய நிலத்தை தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மனோகரன், நிர்வாகிகள் குமரவேல், சண்முகம், சுந்தரராமன், அமுதா, செல்வி உள்பட 7 பேர் நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து வாங்கிய ரூ.7 கோடியை திரும்ப செலுத்தாததால் ஏலம் அறிவிப்பு வெளியானது தெரியவந்தது.
ஓய்வுபெற்ற சார் பதிவாளர் மீது வழக்கு
மேலும் பாகூர் பத்திரப்பதிவு துறையில் நிலத்திற்கான வில்லங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட தகவல் நீக்கப்பட்டு 99 பேருக்கு மனைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மனோகரன், குமரவேல் உள்பட 7 பேர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வில்லங்கம் சான்றிதழில் நிலம் அடமானம் வைத்து கடன் வாங்கிய தகவலை மறைத்து மனை பதிவு செய்து கொடுத்த அப்போதைய பாகூர் சார்-பதிவாளர் ஹரிகிருஷ்ணன் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஹரிகிருஷ்ணன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.