அரசு பஸ் மோதி தம்பதி பலி
|திருநள்ளாறில் மோட்டார் சைக்கிளில் ஜெபக்கூட்டத்துக்கு சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
திருநள்ளாறு
திருநள்ளாறில் மோட்டார் சைக்கிளில் ஜெபக்கூட்டத்துக்கு சென்றபோது அரசு பஸ் மோதி தம்பதி பலியானார்கள்.
ஜெபக்கூட்டத்துக்கு...
புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு நல்லெழுந்தூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). அவரது மனைவி லதா (55). இத்தம்பதிக்கு அருண் (22) என்ற மகனும், திவ்யா (19) என்ற மகளும் உள்ளனர்.
இன்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருநள்ளாறு அருகே உள்ள ஜெபக்கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
தம்பதி பலி
அப்போது, திருநள்ளாறு-கும்பகோணம் சாலையில் செல்லூர் அருகே சென்றபோது அதிக வேகத்தில் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் வெங்கட்ரமணி, லதா இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மேலும் லதாவின் தலை, உடலில் பஸ் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
சற்றுத் தொலைவில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வெங்கட்ரமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்சுக்கு போன் செய்ததுடன், திருநள்ளாறு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் தாமதமாக வந்தது. அங்கு உயிருக்குப் போராடிய வெங்கட்ரமணியை அதில் ஏற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
டிரைவர் மீது வழக்கு
விபத்து குறித்து திருநள்ளாறு போலீசார் பஸ் டிரைவர் ரவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெபக்கூட்டத்திற்கு சென்ற தம்பதி பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.