கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை பருத்தி விவசாயிகள் முற்றுகை
|பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் கேட்டு காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போது தடுத்த போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால்
பருத்திக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் கேட்டு காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போது தடுத்த போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உரிய விலை இல்லை
காரைக்கால் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 4,500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருத்தி செடிகளில் சிம்பின் மாவு பூச்சி போன்ற நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பெருந்தொகையை செலவு செய்துள்ளனர். இருப்பினும் விளைவித்த பருத்திக்கு கடந்தாண்டு ஒரு கிலோ 120-க்கு விற்ற பருத்தி பஞ்சு, இந்த ஆண்டில் ரூ.45-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் உரிய விலை கிடைக்காமல் பருத்தி சாகுபடி செலவை கூட விவசாயிகளால் ஈடு செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். எனவே காரைக்கால் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், பயிர் காப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் காரைக்கால் கூடுதல் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.
விவசாயிகள் முற்றுகை
அதன்படி நேற்று காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு, கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த காரைக்கால் நகர போலீசார் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி அந்த இடத்திலேயே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமீம், அ.தி.மு.க. மாதவன், அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.