பாரதி பூங்காவில் அத்துமீறிய காதலர்களை எச்சரித்த போலீசார்
|புதுவை பாரதி பூங்காவில் அத்துமீறிய காதலர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
புதுச்சேரி
புதுவை பாரதி பூங்காவில் அத்துமீறிய காதலர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
காதல் ஜோடி அத்துமீறல்
புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் வந்து செல்கின்றனர். இதேபோல் காதலர்களும் அதிக அளவில் தஞ்சம் அடைகின்றனர்.
பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் மதிய வேளையில் உணவு ஊட்டுவதற்காக பெற்றோர் பூங்காவிற்கு அழைத்து வருகின்றனர்.
இதனிடையே பூங்காவுக்கு வரும் காதலர்கள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது.
போலீசார் எச்சரிக்கை
இ்ந்தநிலையில் பெரியகடை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பூரணி மற்றும் போலீசார் நேற்று பாரதி பூங்காவில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மரத்தின் கீழ் தனியாக அமர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட சில காதல் ஜோடிகளை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சிலர் தங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிலர் பள்ளி, கல்லூரி செல்லாமல் பூங்காவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களது பெற்றோரின் செல்போன் எண்களை வாங்கி போலீசார் பேசினர். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட காதல் ஜோடிகளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.