< Back
புதுச்சேரி
லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி
புதுச்சேரி

லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி

தினத்தந்தி
|
17 July 2023 11:42 PM IST

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரியை முந்த முயற்சி

வில்லியனூர் அருகே உள்ள சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் (30), காளிதாஸ் (31) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வில்லியனூருக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை எழிலரசன் ஓட்டினார்.

வில்லியனூர் ரெயில்வே தண்டவாளம் அருகே பட்டாணிக்களம் என்ற இடத்தில் சென்ற போது, முன்னால் சென்ற லாரியை எழிலரசன் முந்த முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது, எழிலரசன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெருமாள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கினார்.

சிகிச்சை பலனின்றி சாவு

மேலும் நண்பர்கள் எழிலரசன், காளிதாஸ் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த உம்மன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த பெருமாள் உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெருமாள் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்