பல்கலைக்கழக கலையரங்கம் ஜப்தி
|கட்டுமான நிறுவனத்துக்கு நிலுவை தொகை வழங்காததால் புதுவை பல்கலைக்கழக புதிய கலையரங்கம் ஜப்தி செய்யப்பட்டது.
புதுச்சேரி
கட்டுமான நிறுவனத்துக்கு நிலுவை தொகை வழங்காததால் புதுவை பல்கலைக்கழக புதிய கலையரங்கம் ஜப்தி செய்யப்பட்டது.
புதுவை பல்கலைக்கழகம்
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுவை மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் நவீன வசதிகளுடன் கலையரங்கம் (ஆடிட்டோரியம்) தனியார் கட்டுமான நிறுவனம் மூலம் கட்டப்பட்டது. ஆனால் அந்த தனியார் நிறுவனத்திற்கு, முழு தொகையையும் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கவில்லை.
அதையடுத்து தனியார் நிறுவனம் புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலுவை தொகையான ரூ.4 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 430 வழங்க உத்தரவிட்டது. ஆனால் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
ஜப்தி
இந்தநிலையில் புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி இளவரசன் உத்தரவின்பேரில் புதிய கலையரங்கத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அமீனா வெங்கட், கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் புதுவை பல்கலைக்கழகத்தில் புதிய கலையரங்கத்தை ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர். இதனால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.