< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2023 8:34 PM IST

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுப்பு புறக்கணிப்பு

புதிய கல்விக்கொள்கையில் (தேசிய கல்விக்கொள்கை) தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக மாணவ, மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ்மொழி பாடம் 4 பருவங்களாக இருப்பதை 2 பருவங்களாக குறைக்கக்கூடாது என்பன போன்ற கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் கடந்த 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆர்ப்பாட்டம்

ஆனாலும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி, தாகூர் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி உள்பட புதுவை அரசின் கலைக்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஷிப்டு முறையில் இயங்கும் இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்பு இல்லாத காலை நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு பேசியதாவது:-

மொழிக்கு பங்கம்

கல்லூரிகளில் அடிப்படை வசதி கேட்டு மாணவ, மாணவிகள் போராடிய காலம் மாறி தற்போது தமிழ்மொழிக்காக வீதிக்கு வந்துள்ளனர். தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியில் பேசும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 கொடுக்கிறார்கள். அதேபோல் புதுச்சேரி அரசு கொடுக்குமா? மாணவிகளுக்கு பிங்க் நிற பஸ் இயக்கப்படும் என்று கூறிய அமைச்சரையே பதவியில் இருந்து எடுத்துவிட்டார்கள். நம் மொழிக்கு, இனத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதியாக உள்ளது. இங்கு நடப்பது முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆட்சியா? பா.ஜ.க. ஆட்சியா? மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்-அமைச்சர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்