கல்லூரி மாணவர் தற்கொலை
|தந்தை இறந்த சோகத்தில் இருந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை
தந்தை இறந்த சோகத்தில் மீளாதுயரத்தில் இருந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறந்த சோகம்
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார் பாளையம் மாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் ராமு (வயது 47). இவரது மனைவி முல்லை. இத்தம்பதிக்கு கிஷோர் (22) என்ற மகனும், வினோதா, அக் ஷயா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
திருபுவனை அருகே உள்ள தனியார் கல்லூரியில் கிஷோர் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் தந்தை ராமு இறந்து போனார். தந்தை மீது கிஷோருக்கு அளவுக்கு கடந்த பாசம் வைத்திருந்தார். தந்தை இறந்த நாள் முதல் கிஷோர் யாரிடமும் சரிவர பேசாமல் மீளாதுயரத்தில் இருந்து வந்துள்ளார். சில நேரங்களில் இறந்து போன தந்தையின் புகைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்துள்ளார்.
தற்கொலை
வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கிஷோர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த தாயார் முல்லை, அங்கு மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
தகவல் அறிந்த திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஏட்டு அழகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தந்தை இறந்த சில மாதங்களில் மகன் தற்கொலை செய்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.