விடுதியில் இருந்து கல்லூரி மாணவி மாயம்
|புதுவை அரசு வேளாண்மை கல்லூரி விடுதியில் இருந்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
காரைக்கால்
புதுச்சேரியை அடுத்த தவளக்குப்பம் காந்திநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சாதனா (வயது 20). காரைக்காலை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் உள்ள பஜன்கோவா அரசு வேளாண்மை கல்லூரியில் இளங்கலை விவசாயம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
நேற்று இரவில் மாணவிகளின் வருகைப்பதிவேட்டை கல்லூரி விடுதி ஆசிரியை உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். அப்போது மாணவி சாதனாவின் பெயர் மட்டும் இல்லை. சக மாணவிகளிடம் உமாமகேஸ்வரி விசாரித்தபோது, யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மாணவி தங்கி இருந்த அறையை சோதனைசெய்தபோது சாதனா கைப்பட எழுதி வைத்து இருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் 'எனது சினிமா கனவு நிறைவேற, அந்த கனவை நிறைவேறும் இடத்திற்கு செல்வதால், என்னை யாரும் தேடவேண்டாம்' என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை அறிந்து விடுதி ஆசிரியை மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவி சாதனாவை கண்டுபிடித்து தருமாறு திருநள்ளாறு போலீசில் உமா மகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாதனாவை தேடி வருகின்றனர்.
சினிமா கனவில் விடுதியில் இருந்து மாணவி மாயமான சம்பவம் காரைக்கால் வேளாண்மை கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.