புதுச்சேரியில் 'துணிவு' நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிக்கு கலெக்டர் அனுமதி
|புதுச்சேரியில் ‘துணிவு’ படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வரும் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை ரத்து செய்வதாக மாவட்ட கலெக்டர் வல்லவன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரியில் 'துணிவு' படத்தை திரையிடும் திரையரங்கங்களின் உரிமையாளர்கள் இன்று புதுச்சேரி கலெக்டரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால், அதற்கான பணத்தை திருப்பித் தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் ஆவேசத்துடன் ஏதேனும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதனை பரிசீலித்த கலெக்டர் வல்லவன், புதுச்சேரியில் 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.