அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
|காரைக்காலில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிகாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட பேரிடர் மீட்புத்துறை மூலம், திரு-பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி ஜூலை மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசுகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது கடலில் செல்லும் கப்பல், திடீரென விபத்து ஏற்பட்டு, எண்ணெய் கசிவு மற்றும் அதனை தொடர்ந்து கடற்கரையில் ஒதுங்கும் எண்ணெய் கழிவுகளை அப்புறபடுத்துவது தொடர்பாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறைகள், தனியார் நிறுவனங்கள், ஆப்தமித்ரா மற்றும் குடிமை பாதுகாப்பு படை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பேரிடர் மேலாண்மை துணை கலெக்டர் பாஸ்கரன், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.