< Back
புதுச்சேரி
பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்
புதுச்சேரி

பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்

தினத்தந்தி
|
7 Oct 2023 10:07 PM IST

சனி பெயர்ச்சி விழாவில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

காரைக்கால்

சனி பெயர்ச்சி விழாவில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

வளர்ச்சி பணிகள்

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காரைக்கால் சென்றார். பின்னர் அவர் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரிகளிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

சனிப்பெயர்ச்சி விழா

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை நடைபெறும் சனி பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சனிப்பெயர்ச்சி வருவதற்குள் சாலை பனிகளை விரைந்து முடிக்கவேண்டும். பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்தனர். அப்போது விவசாயிகள் காவிரி நீர் வராத காரணத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் உத்தரவை ஏற்று காரைக்காலில் மாதந்தோறும் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக கலெக்டர் மற்றும் அரசு துறை அதிகாரிகளை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். காரைக்காலில் அனைத்து சாலைகளையும் சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் என்னிடம் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் வரவேண்டும். குறிப்பாக இந்த நேரம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 0.5 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்திருக்கிறது. எனவே நமக்கு தேவையான டி.எம்.சி. தண்ணீரை பெற அரசுத்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பார்கள். ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்