முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல்
|பதவிநீக்கம் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைந்ததில் இருந்தே அமைச்சரவை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக இருகட்சிகளுக்கும் இடையே உரசல் இருந்து வந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும்போதே அவருடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
மேலும் கடந்த முறை ராஜ்யசபா தேர்தலின்போது எம்.பி. பதவியை பா.ஜ.க.வே வாங்கிக்கொண்டது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே போட்டியிடும் என்று அறிவித்து தேர்தல் பணிகளையும் அக்கட்சி தொடங்கிவிட்டது. மத்திய மந்திரி எல்.முருகன் புதுவை மாநில பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு அவ்வப்போது புதுவை வந்து திட்டங்களை தொடங்கிவைப்பதும், கட்சி கூட்டங்களை நடத்துவதும் என்று தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.
பதவி பறிப்பு
இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் பதவியை பறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 8-ந்தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கடிதம் கொடுத்தார். ஆனால் அதைப்பற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
ஆனால் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், சபாநாயகர் செல்வமும் சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்தனர். மேலும் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார் என்றும் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக அந்த கடிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிருப்தி அடைந்தார். என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளின் வலியுறுத்தல் காரணமாக அவர் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியேறினால் நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுக்கு தென்மாநிலங்களில் சரிவு ஏற்படும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, அரசு நீண்ட இழுபறிக்குப்பின் கடந்த 21-ந்தேதி சந்திரபிரியங்காவின் நீக்கத்துக்கு ஒப்புதல் அளித்தது.
'சீல்' வைக்க போட்டோபோட்டி
இதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் சந்திரபிரியங்காவின் அறை காலி செய்யப்பட்டது. அந்த அறைக்கு சட்டசபை செயலாளரும் சபாநாயகரின் தனிச்செயலாளருமான தயாளன் நேற்று தீடீரென 'சீல்' வைத்தார். இந்த தகவல் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
பொதுவாக ஒரு அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டாலோ, அல்லது ராஜினாமா செய்தாலோ அவர்கள் பயன்படுத்திய அறை உடனடியாக 'சீல்' வைக்கப்படுவதில்லை. சட்டசபை செயலகத்திடம் அந்த அறையின் சாவி ஒப்படைக்கப்படும். அதுதான் நடைமுறை. ஆனால் இந்த முறை 'சீல்' வைக்கப்பட்டது.
ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை ஏற்கும் விஷயத்தில் மத்திய அரசு தன்னை அவமதிப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உணர்ந்தார். தற்போது சபாநாயகர் மூலம் தனக்கு மேலும் நெருக்கடி கொடுப்பதாக அவர் கருதுகிறார்.
அரசியல் பரபரப்பு
நேற்று பிற்பகலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் தனது அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது சந்திரபிரியங்காவின் அறைக்கு சீல் வைக்கப்பட்டதை பார்த்து சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், சட்டசபை செயலாளர் மூலம் வைக்கப்பட்ட சீல், முதல்-அமைச்சர் அலுவலக ஊழியரால் உடனடியாக அகற்றப்பட்டது.
அடுத்ததாக முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர் அமுதன் மூலம் சீல் வைக்கப்பட்டு அங்கு நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கும், சபாநாயகர் செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு உச்சத்தை அடைந்திருப்பது பட்டவர்த்தனமானது. இதன் மூலம் யார் அதிகாரம் படைத்தவர்? என்ற நிலை உருவாகி உள்ளது.
சந்திரபிரியங்கா விவகாரத்தில் தற்போதுதான் பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், முதல்-அமைச்சர், சபாநாயகர் அலுவலக அதிகாரிகள் போட்டிபோட்டு 'சீல்' வைத்த சம்பவம் புதுவை அரசியலில் மீண்டும் பரபரப்பையும், புயலையும் கிளப்பி உள்ளது. இதன் மூலம் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.