< Back
புதுச்சேரி
புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க வாய்ப்பு
புதுச்சேரி

புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க வாய்ப்பு

தினத்தந்தி
|
22 Oct 2023 9:54 PM IST

சந்திரபிரியங்காவுக்கு பதிலாக புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ.வை நியமிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுச்சேரி


சந்திரபிரியங்கா

புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாதால் அவரை பதவிநீக்கம் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 8-ந் தேதி கவர்னரிடம் கடிதம் கொடுத்தார். அவர் அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? அல்லது ராஜினாமா செய்தாரா? என்ற குழப்பம் நிலவியது.

இதற்கிடையே அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்காவை நீக்கிய முதல்-அமைச்சரின் கடிதத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான கடிதம் புதுவை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரங்கசாமி தீவிர ஆலோசனை

இதற்கிடையே புதிய அமைச்சரை தேர்வு செய்ய முதல்-அமைச்சர் ரங்கசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமியை அப்பா பைத்தியசாமி கோவிலில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனால் புதிய அமைச்சராக திருமுருகன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால் பகுதி புறக்கணிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே காரைக்கால் பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திருமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு விரைவில் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்