செல்போன் கோபுரம், மரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டம்
|சேதராப்பட்டு தொழிற்சாலையில் செல்போன் கோபுரம், மரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காலாப்பட்டு
சேதராப்பட்டு தொழிற்சாலையில் செல்போன் கோபுரம், மரத்தில் ஏறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனரக தொழிற்சாலை
புதுவை சேதராப்பட்டில் மயிலம் சாலையில் தனியார் கனரக தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார உயர் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள், கட்டுமான பணிகளுக்கான ராட்சத இரும்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தொழிற் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 259 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் குவிப்பு
கடந்த மாதம் 21-ந்தேதி முதல் தொழிற்சாலை வாசலில் அமர்ந்து 24 மணி நேரமும் அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் தொழிற்சாலை இயங்கவில்லை.
இன்று போலீசாரின் பாதுகாப்போடு நிரந்தர மற்றும் வடமாநில தொழிலாளர்களை கொண்டு தொழிற் சாலையை இயக்க நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், நிரந்தர பணியாளர்களை தொழிற்சாலைக்குள் செல்ல விடாமல் தடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிரந்தர பணியாளர்களை தொழிற்சாலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே தொழிற் சாலைக்குள் வேலைக்கு செல்ல நிரந்தர பணியாளர்களும், வடமாநிலத்தவரும் தொழிற்சாலை முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக் காரர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
தற்கொலை மிரட்டல்
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட வானூரை சேர்ந்த தினகரன் மற்றும் நாராயணமூர்த்தி மரங்களிலும், குன்னம் பகுதியை சேர்ந்த ராஜேஷ், வடமங்கலத்தை சேர்ந்த பாரதி வெங்கடேசன், ஜக்கம்பட்டியை சேர்ந்த மணிமாறன் உள்ளிட்டோர் செல்போன் கோபுரத்திலும் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். ஜக்கம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.
மேலும் செல்போன் கோபுரம், மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கீழே இறங்கி வரும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று ஆவேசமாக கூறினர்.
கலெக்டர் பேச்சுவார்த்தை
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலரை கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது தங்களது கோரிக்கை தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொழிற் சாலைக்குள் நிரந்தர தொழிலாளர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கலெக்டர் வல்லவன் கூறினார்.
ஆனால் தற்காலிக தொழிலாளர்களை தொழிற் சாலைக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றும், தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நிரந்தர தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலை செயல்பட தொடங்கியது. தொடர்ந்து தொழிலாளர்கள் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.