50 கன்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் வருகை
|புதுவை துறைமுகத்துக்கு 50 கன்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் வந்துள்ளது.
புதுச்சேரி
புதுவை துறைமுகத்துக்கு 50 கன்டெய்னர்களுடன் சரக்கு கப்பல் வந்துள்ளது.
ரசாயனப் பொருட்கள்
சென்னை துறைமுகத்திலிருந்து புதுவை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அவ்வப்போது சரக்குகளை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வந்து செல்கின்றன.
இன்று சென்னை துறைமுகத்திலிருந்து 50 கன்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் ஒன்று புதுவை துறைமுகத்துக்கு வந்தது. கடலூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்காக ரசாயன பொருட்கள் கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளன. 102 கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் வசதியுள்ள இந்த கப்பலில், 50 கன்டெய்னர்கள் மட்டும் ஏற்றி கொண்டு வரப்பட்டது. துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ளதால் இந்த கப்பல் தடையின்றி துறைமுகத்தை வந்தடைந்தது.
புதுவை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்ய 300 கன்டெய்னர்களை கையாளும் விதமாக குடோன்களும் தயார் நிலையில் உள்ளன. 1000 கன்டெய்னர்களை கையாளும் அளவுக்கு தேவையான இடவசதியும் இங்கு உள்ளது.
முந்திரி பருப்பு ஏற்றுமதி
புதுவை துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தகவல் அறிந்து பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள் வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பண்ருட்டியை சேர்ந்தவர்கள் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சரக்குகளை ஏற்றுமதி செய்ய முன்வந்தால் கூடுதலாக சரக்கு கப்பல்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.