கார் டிரைவர் கல்லால் அடித்துக்கொலை
|வில்லியனூர் அருகே கார் டிரைவரை கல்லால் அடித்து கொலை செய்த கஞ்சா வாலிபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூர்
வில்லியனூர் அருகே கார் டிரைவரை கல்லால் அடித்து கொலை செய்த கஞ்சா வாலிபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் தகராறு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 46). கார் டிரைவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் (16) என்ற மகனும் உள்ளனர். சண்முகசுந்தரம் தற்போது அரியூர் அருகே நவமால் மருதூரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வேலை முடிந்து, புதுச்சேரியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு தனியார் பஸ்சில் சண்முகசுந்தரம் வீட்டுக்கு சென்றார். அப்போது பஸ்சில் இருந்த ஆரியப்பாளையம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 2 பேர் கஞ்சா போதையில் சண்முகசுந்தரத்தை கிண்டல் செய்துள்ளனர். இதனை அவர் தட்டிக்கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கல்லால் தாக்கி கொலை
பின்னர் அரியூர் பஸ் நிறுத்தம் வந்ததும், சண்முகசுந்தரம் பஸ்சில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் தகராறு செய்த 2 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி, சண்முகசுந்தரத்தை பின்தொடர்ந்து வந்தனர்.
சிறிது தூரம் சென்ற நிலையில் சண்முகசுந்தரத்திடம் பிரச்சினை செய்து, அவரை தாக்கினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அருகில் கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கினர். மேலும் பெரிய அளவிலான கல்லை அவரது தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், சண்முகசுந்தரம் பிணமாக கிடப்பது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி, இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த சண்முகசுந்தரம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.