காரைக்கால் மீனவர்களின் படகு சிறைபிடிப்பு
|இரட்டை மடி வலையை பயன்படுத்திய காரைக்கால் மீனவர்களின் படகு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி
இரட்டை மடி வலையை பயன்படுத்திய காரைக்கால் மீனவர்களின் படகு சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படகு சிறைபிடிப்பு
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, சிறு மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புதுவை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மீனவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று இரட்டை மடிவலையை பயன்படுத்தி மீன்பிடித்த காரைக்கால் மீனவர்களின் விசை படகை புதுவை மீனவர்கள் சிறை பிடித்தனர்.
பேச்சுவார்த்தை
அந்த படகை புதுவை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள். இதனால் மீனவ கிராமங்களுக்கு இடையே பதற்றமான நிலை நிலவியது.
இந்தநிலையில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்தார் நேற்று புதுவை வந்தனர். தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் அவர்கள் புதுவை மீனவ கிராம பஞ்சாயத்தார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
புதுவை மீனவர்கள் கண்டிப்பு
அந்த பேச்சுவார்த்தையின்போது மீனவர்களிடையே காரசாரமான விவாதங்கள் நடந்தது. கடலூர் முதல் மாமல்லபுரம் வரை தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிக்கக்கூடாது என்று புதுவை மீனவர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக 2 நாட்களில் தங்கள் மீனவ கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுப்பதாக காரைக்கால் மீனவர்களும் உறுதியளித்தனர். மேலும் ஏற்கனவே மீன்பிடிக்க சென்றிருக்கும் படகுகளை 2 நாட்களுக்கு சிறைபிடிக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
விடுவிப்பு
இதை புதுச்சேரி மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறைபிடித்த படகினையும் விடுவித்தனர். அதன்பின்னர் காரைக்கால் மீனவர்கள் படகுடன் புதுவையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.