புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்படும்
|இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
முதலாம் ஆண்டு வகுப்பு
புதுச்சேரி கதிர்காமத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்க விழா இன்று காலை நடந்தது. சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார்.
மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பலருக்கு கிடைக்காத வாய்ப்பு
புதுவை மாநிலத்தில் மேல்நிலை கல்வி வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கன் பயனடைந்துள்ளனர்.
பலருக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும். பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு வரும்போது சுதந்திரமாக தோன்றும். அந்த மனப்போக்கு வரும்போதுதான் முதலாம் ஆண்டிலேயே சிலர் படிப்பதை கைவிட்டு விடுகின்றனர். சுதந்திரமாக இருப்பதில் தவறில்லை, ஆனால் படிப்பதில் கவனத்தை விட்டுவிடக்கூடாது.
புற்றுநோய் சிகிச்சை மையம்
மாணவர்கள் பருவத்தேர்வுகளில் அரியர்ஸ் இல்லாமல் தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான் அரசின் சலுகைகளை பெற முடியும். ஒவ்வொரு மருத்துவரையும் உருவாக்க அரசு அதிக செலவு செய்கிறது. இந்த பொறுப்புகளை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகிறோம். இங்கு அனைத்து பிரிவுகளுக்கும் மேற்படிப்பு மையம் தொடங்கப்படும்.
இந்த மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படும். கூடுதல் அறுவை சிகிச்சை கூடங்கள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். அதையும் செய்து தர உள்ளோம். இந்த மருத்துவக்கல்லூரியை உலக தரம் வாய்ந்ததாக உருவாக்க அரசு தேவையான வசதிகளை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மருத்துவர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.