< Back
புதுச்சேரி
காரைக்காலில் கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
புதுச்சேரி

காரைக்காலில் கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

தினத்தந்தி
|
9 Jan 2023 12:01 AM IST

உறவினருடன் காரைக்கால் கடற்கரைக்கு சென்று விளையாடியபோது கடலில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியாகினர்.

காரைக்கால்

உறவினருடன் காரைக்கால் கடற்கரைக்கு சென்று விளையாடியபோது கடலில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியாகினர்.

சகோதரர்கள்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரனாஜ் தாக்கூர். இவர் குடும்பத்தோடு காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகன்கள் முன்னா தாக்கூர் (வயது 15), சிகந்தர் குமார் தாக்கூர் (14). இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அண்ணன், தம்பி இருவரும் வீட்டில் இருந்தனர். அவர்கள் மாலையில் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி உறவினர் ஒருவருடன் காரைக்கால் கடற்கரைக்கு சென்றனர்.

ராட்சத அலையில் சிக்கினர்

அங்கு சகோதரர்கள் 2 பேரும் கடலில் இறங்கி விளையாடினர். சற்று ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில், திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த காரைக்கால் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கடலோர போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான அண்ணன், தம்பி இருவரையும் தீவிரமாக தேடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முகத்துவார பகுதியில் சிகந்தர் குமார் தாக்கூர் பிணமாக மீட்கப்பட்டான்.

பெற்றோர் கதறல்

கடலில் மூழ்கிய முன்னா தாக்கூர் உடலை போலீசார் தேடினர். இரவு நேரமானதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தேட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மகன்கள் 2 பேரும் கடலில் மூழ்கிய தகவல் அறிந்து கடற்கரைக்கு ரனாஜ் தாக்கூர் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்தனர். அவர்கள், சிகந்தர்குமார் தாக்கூர் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

விடுமுறையில் பொழுதை கழிக்க கடற்கரைக்கு வந்தபோது அண்ணன், தம்பி இருவரும் கடலில் மூழ்கி இறந்த சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்