பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு
|பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு என்று தாய்மார்களுக்கு மருத்துவ அதிகாரி அறிவுரை கூறினார்.
அம்பகரத்தூர்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு என்று தாய்மார்களுக்கு மருத்துவ அதிகாரி அறிவுரை கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட தலையாரி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை தாங்கினார்.
கிராமப்புற செவிலியர் விவேதா வரவேற்றார். செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் லட்சுமிபதி, துணைத்தலைவர் சோழசிங்கராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசியதாவது:-
மார்பக புற்றுநோய் வாய்ப்பு குறைவு
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே தலை சிறந்த உணவு. எளிதில் ஜீரணிக்க கூடியது. தொற்றுகள் இல்லாதது. இதனால், நோய்தொற்று, வயிற்றுப்போக்கு உண்டாகாது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை, புட்டி பால் குடித்து வளரும் குழந்தையை விட பல மடங்கு புத்தி கூர்மை, உடல் வலிமை உடையதாக விளங்கும்.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு குறைகிறது. குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு தேவையான கூடுதல் புரதம் மற்றும் அடிப்படை ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே தாய்ப்பாலில் கிடைக்கிறது. தாய்ப்பால் ஊட்டுவதால் பிரசவத்திற்கு பிறகு கருப்பை எளிதில் சுருங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மார்பக புற்றுநோய் வலியுறுத்தும் விதமாக பிங்க் ரிப்பன் கையில் ஏந்தி தாய்மார்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.