< Back
புதுச்சேரி
நல்ல ரோட்டை உடைத்து புதிய சாலை
புதுச்சேரி

நல்ல ரோட்டை உடைத்து புதிய சாலை

தினத்தந்தி
|
17 July 2023 10:32 PM IST

புதுவை நகரப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளநிலையில் நல்ல நிலையில் உள்ள சிமெண்டு சாலையை உடைத்து மீண்டும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

புதுச்சேரி

புதுவை நகரப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளநிலையில் நல்ல நிலையில் உள்ள சிமெண்டு சாலையை உடைத்து மீண்டும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நேரான வீதிகள்

புதுச்சேரி என்றாலே நேரான சுத்தமான வீதிகள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் உள்ளது. அதற்கேற்றவாறு பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை சார்பில் சாலைகள் அமைக்கப்படும். இந்த சாலை அமைப்புகள் வெளிமாநிலத்தவரை புதுச்சேரிக்கு விரும்பி வரவழைக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தநிலை மாறிவருகிறது. பிரதான சாலைகளே மீண்டும் மீண்டும் போடப்பட்டு சாலையை உயர்த்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக தார்வாசனை அறியாத வகையில் உள்ளது.

குறிப்பாக உப்பளம், ராஜ்பவன், உருளையன்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் ஒருசிலவற்றை தவிர, சாலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட சிமெண்டு சாலைகளாக மாறிவிட்டன. அதேநேரத்தில் அதனையொட்டி உள்ள நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, காமராஜ் நகர் உள்ளிட்ட தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாகவே உள்ளது.

இந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. பல தெருக்களில் தார் சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் மீண்டும் அதன்மேல் தார் ஊற்றி பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த சாலைகளில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து அவை மண்சாலைகளாகவே மாறிவிட்டன.

ரூ.12 லட்சம் வீணாகிறது

மழைக்காலங்களில் அந்த சாலைகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இந்தநிலையில் புதுவை புதிய பஸ் நிலையம் எதிரே சோழன் வீதியில் நன்றாக இருக்கிற சிமெண்டு சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து எடுத்துவிட்டு மீண்டும் அங்கு புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இத்திட்டத்திற்காக ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகையானது நல்ல சாலையை உடைத்து வீணாக்கப்படுகிறது.

நல்ல சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து எடுத்து விட்டு புதிதாக சாலைப்போடும் பணியை அப்பகுதி மக்களே பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி மாடல்

நகரப்பகுதியில் பல சாலைகள் பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் இருக்கும்போது நல்ல நிலையில் இருக்கும் ரோட்டை உடைத்து மீண்டும் சிமெண்டு சாலை அமைப்பதுதான் புதுச்சேரி மாடலோ? என்று அனைவரும் பேசும் அளவுக்கு இந்த செயல்பாடு உள்ளது. அதற்கு பதிலாக மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைத்து கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதுடன் மட்டுமின்றி, அரசையும் மக்கள் பாராட்டுவார்களே!.

மேலும் செய்திகள்