சிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் - காரைக்காலில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம்
|காரைக்காலில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காரைக்கால்,
காரைக்காலில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, போலீசாரும், டாக்டர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான் எனக்கூறி, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவனின் உறவிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து மாணவன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று(வெள்ளிக்கிழமை) காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தது.
அதன்படி காரைக்காலில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்திற்கு காரைக்கால் இந்து முன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு-பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினி டெம்போ சங்கம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.