< Back
புதுச்சேரி
புதுவையில் பா.ஜனதா முதன்மை கட்சியாக மாற வேண்டும்
புதுச்சேரி

புதுவையில் பா.ஜனதா முதன்மை கட்சியாக மாற வேண்டும்

தினத்தந்தி
|
15 Oct 2023 11:12 PM IST

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.

புதுச்சேரி

மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.

பாராட்டு விழா

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி எம்.பி. சமீபத்தில் பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டு விழா முதலியார்பேட்டையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.

விழாவுக்கு மத்திய மீன்வள, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கி மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி.க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ராமலிங்கம், வெங்கடேசன், ரிச்சர்ட், சிவசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முதன்மை கட்சி

விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

பா.ஜனதா தியாகத்துக்கு பெயர் போன கட்சி. 1980-ல் வெறும் 2 எம்.பி.க்களை கொண்டிருந்த கட்சி, தற்போது பல கோடி தொண்டர்களையும், உலகில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக மாறியிருக்கிறது. தற்போது புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. பொறுப்பேற்றுள்ளார். புதுவையில் பா.ஜ.க. முதன்மையான கட்சியாக மாற வேண்டும்.

ஜி 20-ன் மாநாடு வெற்றி, சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது போன்ற சாதனைகளை தொடர வேண்டும். பாரத தேசம் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம் நீடிக்க மோடி தலைமையில் ஆட்சி மலர வேண்டும். இதற்காக நாம் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அசுர வளர்ச்சி

விழாவில் பா.ஜ.க. தலைவர் செல்வகணபதி எம்.பி. பேசுகையில் 'பா.ஜ.க. வளர்ச்சிக்காக, நான் தலைவராக இல்லாமல் உங்களில் ஒருவராக இருந்து உழைக்க தயாராக உள்ளேன். புதுவையில் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு தொண்டர்கள் தான் முக்கிய காரணம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவரை அமோக வெற்றி பெற செய்வது நமது கடமை. பா.ஜ.க.வின் அசுர வளர்ச்சியை கண்டு அனைவரும் பிரமித்து இருக்கிறார்கள். நாம் மென்மேலும் வளர வேண்டும். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்.

விழாவில் பா.ஜ.க. பிரமுகர் செல்வாஸ் அசோகன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. நன்றி கூறினார்.

மீனவர்கள் பிரச்சினையில் சுமுக தீர்வு

விழா முடிந்தவுடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில் 'புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு பரிசீலிக்கும். ராமேசுவரம் மீனவர்கள் எல்லை தாண்டி போவதும், இலங்கை அரசு சிறைபிடிப்பதும் நீடித்து வருகிறது. இதனை தடுக்க 2 நாட்டின் மீனவர்களின் குழுவானது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது இலங்கையில் உள்ள சூழ்நிலை காரணமாக அந்த பேச்சுவார்த்தை தள்ளிபோய் இருக்கிறது. மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை மீட்டு வருகிறது. 2 நாட்டு மீனவர்கள் குழுவின் மூலம் இதற்கு சுமுக முடிவு காணப்படும். புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. தங்களது பணியை தொடங்கி உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி தலைவர்கள் கலந்துபேசி வேட்பாளர் குறித்த முடிவை எடுப்போம் என்றார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இதில் நான் கருத்து கூற முடியாது. இது அந்த (என்.ஆர்.காங்கிரஸ்) கட்சி நிலைப்பாடு. அந்த கட்சியின் தலைவர்கள் பதில் சொல்வார்கள் என்று பதில் அளித்தார்.

------

மேலும் செய்திகள்