பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற முடிவு?
|சந்திர பிரியங்கா விவகாரத்தில் அதிருப்தியில் உள்ளதால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையும்போதே என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள 14 இடங்களில் பா.ஜ.க.-9, அ.தி.மு.க.-5 இடங்களில் போட்டியிட்டது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. இந்த கூட்டணி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றார்.
நியமன எம்.எல்.ஏ.க்கள்
பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருக்கும்போதே அவருடன் ஆலோசிக்காமல் பா.ஜ.க.வினர் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. இது, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் கூட்டணி தர்மத்துக்காக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனிடையே அமைச்சரவை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு போன்றவற்றிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்குப்பின் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கூட்டணி கட்சியான பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் புதுவையில் கடந்த காலங்களில் இருந்ததைப்போலவே அதிகாரிகள் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி பலமுறை பொதுமேடைகளிலேயே சுட்டிக்காட்டினார். ஆனால் பிரச்சினைகள் தான் தீர்ந்தபாடில்லை. இதனிடையே தற்போதைய தலைமை செயலாளர் மற்றும் ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எந்த திட்டமும் முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிருப்தியில் உள்ளார்.
சந்திர பிரியங்கா விவகாரம்
மேலும் சமீபத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவை பதவிநீக்கம் செய்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அந்த கடிதம் இதுவரை மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இது முதல்-அமைச்சர் ரங்கசாமி தனிப்பட்ட கவுரவ பாதிப்பாக உணருகிறார். இதற்கு முன் எத்தனையோ முறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். அந்த காலகட்டத்தில் அமைச்சர்கள் நீக்கம், ராஜினாமா, பதவியேற்பு ஆகியவற்றுக்கு கடிதம் அனுப்பப்பட்ட ஒருசில மணி நேரத்திலேயே மத்திய அரசு ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கும்.
ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் 10 நாட்கள் ஆகியும் இதுவரை மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது என்.ஆர்.காங்கிரசார் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பெயருக்கு சரிவை ஏற்படுத்த மறைமுக வேலை நடப்பதாக கருதுகிறது.
வெளியேற திட்டம்
இதுதொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கூட்டணி தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தினர். பா.ஜ.க. தங்களை விட்டு சென்றால் கூட தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சியை தொடரலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஏனெனில் தி.மு.க.வுக்கு 6, காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேற முதல்-அமைச்சர் ரங்கசாமி கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
5 மாநில தேர்தல்
இருந்தபோதிலும் தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் முடிவுகளை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
5 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் இதே கூட்டணியில் தொடரவும், சரிவினை சந்தித்தால் கூட்டணியை விட்டு வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் புதுவை அரசியலில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.