இரு தரப்பினர் மோதல்; கார் சேதம்
|திருக்கனூர் அருகே இரு தரப்பினர் மோதலால் கார் சேதமடைந்தது.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பந்து அங்குள்ள அம்சவள்ளி (வயது 29) என்பவர் வீட்டில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அம்சவள்ளியும் அவரது கணவர் கனகராஜ் மற்றும் உறவினர்கள் முரளி, மூர்த்தி ஆகியோர் கண்டித்துள்ளனர். வாலிபால் விளையாடிய இளைஞர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த வீராசாமி (32) அம்சவள்ளி தரப்பினரிடம் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கினர். இதில் கனகராஜின் கார் சேதமடைந்தது.
இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.