சாலை, குடிநீர் வசதி செய்ய பூமி பூஜை
|பாகூர் அருகே சாலை, குடிநீர் வசதி பணிக்கான பூமி பூஜையை செந்தில்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
பாகூர்
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மூ.புதுக்குப்பம் சுனாமிநகரில் ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் செலவில் தார்சாலை, குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பாகூர் தூக்குப்பாலம் முதல் வண்ணாங்குளம் வரை சாலையை ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தார்சாலை அமைக்கவும், குருவிநத்தம் இலுப்பை தோப்பு குடியிருப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் செலவில் சிமெண்டு சாலை அமைக்கவும், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறை வளாகத்தை சுற்றி ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 675 செலவில் மதில் சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலை பொறியாளர்கள் பிரதீப்குமார், புனிதவதி, பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.