தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்
|பாகூர் அருகே வாணவெடி கோவிலுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டையை வேடிக்கை பார்த்த சிறுவனின் மண்டை உடைந்தது.
கரையாம்புத்தூர்
பாகூர் அருகே வாணவெடி கோவிலுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டையை வேடிக்கை பார்த்த சிறுவனின் மண்டை உடைந்தது.
கோவிலுக்குள் புகுந்த வாணவெடி
பாகூர் அருகே கரையாம்புத்தூரை அடுத்த கடுவனூர் பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர் வாணவெடி போட்டுள்ளார். அப்போது வாணவெடி ஒன்று அங்குள்ள கோவிலுக்குள் புகுந்தது.
இதை அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி நாகராஜ் மற்றும் சிலர் தட்டிக்கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு நாகராஜ் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் குருவிநத்தத்தை சேர்ந்த கண்ணன், அவரது தம்பி அரவிந்த், கடுவனூரை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய 4 பேரும் நாகராஜிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சிறுவன் மண்டை உடைப்பு
மேலும் மோட்டார் சைக்கிள் செயின் கவரை எடுத்து கிருஷ்ணராஜ் அங்கிருந்தவர்களை மிரட்டியதாக தெரிகிறது. அப்போது செயின்கவர் பட்டு சண்டையை வேடிக்கை பார்த்த அருண் மகன் சச்சின் (வயது 16) என்பவர் மண்டை உடைந்தது. இதனால் ரத்தம் கொட்டியதால் மயங்கி விழுந்தார். இதையடுத்து கிருஷ்ணராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த சிறுவன் உள்பட 2 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜ் உள்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.