< Back
புதுச்சேரி
புதுவை, தமிழகத்தை கலக்கிய கொள்ளையன் கைது
புதுச்சேரி

புதுவை, தமிழகத்தை கலக்கிய கொள்ளையன் கைது

தினத்தந்தி
|
22 May 2023 10:51 PM IST

புதுவை, தமிழகத்தை கலக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றவர் ஆவார்.

அரியாங்குப்பம்

புதுவை, தமிழகத்தை கலக்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றவர் ஆவார்.

ஓட்டலில் திருட்டு

புதுவையை அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 43). தவளக்குப்பம் பகுதியில் புதுச்சேரி-கடலூர் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 19-ந்தேதி இவர் வியாபாரம் முடிந்து ஓட்டலை மூடி விட்டு சென்றார்.

மறுநாள் காலையில் திறக்க வந்தபோது, ஓட்டலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓட்டலுக்குள் சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கொள்ளையன் கைது

இதற்கிடையே இன்று அதிகாலை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்த சரத் என்ற சரத்ராஜ் (வயது 23) என்பதும், ஓட்டல் கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11,500 ரொக்கம், மோட்டார் சைக்கிள், திருடுவதற்கு பயன்படுத்திய இரும்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குண்டர் தடுப்பு சட்டம்

அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் 'கைது செய்யப்பட்ட சரத் மீது கொலை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புதுச்சேரி, தமிழகத்தை கலக்கிய இவர், முகமூடி அணிந்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் இவருடன் சேர்ந்து கூட்டாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் புதுச்சேரியில் ஒரு முறையும், தமிழகத்தில் ஒரு முறையும் குண்டர் தடுப்பு சட்டத்தில்சரத் கைது செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.

மேலும் செய்திகள்