< Back
புதுச்சேரி
பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் போக்குவரத்துக்கு தடை
புதுச்சேரி

பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் போக்குவரத்துக்கு தடை

தினத்தந்தி
|
21 July 2023 9:52 PM IST

மேம்பாலம் கட்டும் பணிக்காக பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி சாலையை மூடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

பாகூர்

மேம்பாலம் கட்டும் பணிக்காக பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. முன்னறிவிப்பு இன்றி சாலையை மூடியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

போக்குவரத்துக்கு தடை

விழுப்புரம்-நாகை இடையிலான 194 கி.மீ. சாலையை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கட்டிடங்கள், கடைகள், மரங்கள் அகற்றப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாகூர்-கன்னியக்கோவில் சாலை இடையே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று காலை 9 மணி அளவில் திடீரென பாகூர்-கன்னியக்கோவில் சாலை பேரிகார்டு (இரும்பு தடுப்புகள்) அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது.

ஊழியர்களிடம் வாக்குவாதம்

எந்தவித முன்னறிவிப்பு இன்றி காலை நேரத்தில் சாலையை மூடியதால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 10 கி.மீ. சுற்றி சென்றனர். மேலும் சிலர், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் முன்னறிவிப்பின்றி சாலையை மூடக்கூடாது, உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று மேம்பால பணிகளை தொடரலாம் என்று எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து சாலையில் அமைக்கப்பட்டிருந்த பேரிக்கார்டுகளை அகற்றி 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதற்கிடையே கன்னியக்கோவில்-பாகூர் சாலையின் நடுவே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை அந்த வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதுவரை பாகூர் பகுதியில் இருந்து கன்னியக்கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பாகூர்- பரிக்கல்பட்டு-முள்ளோடை சாலையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்