< Back
புதுச்சேரி
பாகூர் தாலுகா அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை
புதுச்சேரி

பாகூர் தாலுகா அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
25 Oct 2023 8:34 PM IST

ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் ஒரு தனியார் நிறுவனம் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு தரமில்லாமல் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அரசே தரமான மதிய உணவுடன் வாரத்தில் 3 நாட்கள் முட்டை வழங்கிட வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காலாண்டு தேர்வு முடிந்தும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத அவல நிலை நீடிப்பதால், உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினியை உடனே வழங்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசுப்பள்ளி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்..

முற்றுகை போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூர் பாரதி அரசு பள்ளி அருகில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பாகூர் தாலுகா அலுவலகம் நோக்கி சென்றனர். பின்னர், தாலுகா அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க பாகூர் இடைக்கமிட்டி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு, சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பிரவீன்குமார் கண்டன உரையாற்றினார்.

பின்னர் துணை தாசில்தார் விமலனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து விட்டு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்