ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
|ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி
ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
புதுச்சேரி ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் பிரதாப் (வயது 20) ஆட்டோ டிரைவர். அவரது நண்பர் வேலு. இவர்கள் வாணரப்பேட்டையை சேர்ந்த மணி என்பவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சென்றனர். திரும்பி வந்த போது ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மணி பலியானார்.
இந்த நிலையில் மணி, வேலுவுடன் வேகமாக சென்றதால் தான் பலியானதாக அவரது நண்பர்களான ஆட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி என்ற தமிழரசன் மற்றும் சிலர் நினைத்தனர். எனவே வேலுவை தாக்க முடிவு செய்தனர்.
நேற்று அவர்கள் வேலுவை தேடி செட்டிதெருவுக்கு சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த பிரதாப்பை வழிமறித்து வேலு எங்கே என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
வலைவீச்சு
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், பிரதாப்பை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பிரதாப்பை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து சாரதி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.