< Back
புதுச்சேரி
ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி
புதுச்சேரி

ரவுடியை வெட்டிக்கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
19 Jun 2023 9:33 PM IST

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தில் ரவுடியை வெட்டிக் கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல ரவுடி

அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் என்ற லோகநாதன் (வயது 26). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சாலமனுடன் விரோதம் ஏற்பட்டு தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அஜித்தை, சாலமன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டினர்.

கத்தி வெட்டு

வாய்த்தகராறு முற்றவே, சாலமன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தை வெட்டியுள்ளார். அதனை தடுத்த அஜித், அவர்களிடம் தப்பித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை துரத்தி சென்று சாலமன் மற்றும் நண்பர்கள் கற்களால் பலமாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அஜித் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார்கள்.

இச்சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். காயம் அடைந்த அஜித், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் கைது

புகாரின்பேரில் அரியாங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சாலமன், அவரது நண்பர் கிகோன் என்ற பிரவிலோன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அதே பகுதி சேர்ந்த பிரவீன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்