போலீஸ்காரர்களை தாக்கி கொலை மிரட்டல்
|புதுவையில் ஓட்டலில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
ஓட்டலில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரர்கள்
காரைக்கால் கீழகாசாக்குடியை சேர்ந்தவர் அம்சபிரதீபன் (வயது 27). இவர் புதுச்சேரி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்காக கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
நேற்று இவர், தன்னுடன் தங்கியுள்ள போலீஸ்காரர் முருகானந்தத்துடன் திலாசுப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
தாக்குதல்
அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி மணி என்ற பொற்செல்வன், விழுப்புரம் மாவட்டம் வானூர் அச்சரம்பட்டு பகுதியை சேர்ந்த சுதாகர் (36) ஆகியோர் அந்த ஓட்டல் உரிமையாளரிடம் சப்பாத்தி கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை போலீஸ்காரர்கள் அம்சபிரதீபனும், முருகானந்தமும் தட்டிக்கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணி, சுதாகர் ஆகியோர் நீங்கள் யார் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தாங்கள் போலீஸ்காரர்கள் எனத் தெரிவித்தனர். உடனே மணியும், சுதாகரும் நீங்கள் போலீஸ் என்றால் என்ன?, நாங்கள் யார் தெரியுமா? எனக்கேட்டு அம்சபிரதீபனை முகத்தில் குத்தியதில் பல் உடைந்தது. மேலும் தடுக்க முயன்ற முருகானந்தத்தையும் அவர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடி விட்டனர்.
ரவுடி உள்பட 2 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மணி, சுதாகர் ஆகியோரை கைது செய்தனர்.
புதுவையில் போலீஸ்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.