காரை வழிமறித்து 4 பேர் மீது தாக்குதல்
|திரு-பட்டினம் புறவழிச்சாலையில் காரை வழிமறித்து 4 பேரை சரமாரியாக தாக்கிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திரு-பட்டினம்
திரு-பட்டினம் புறவழிச்சாலையில் காரை வழிமறித்து 4 பேரை சரமாரியாக தாக்கிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சுற்றுலா வந்தனர்
நாகை நம்பியார் நகர் பழைய காலனி தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 30). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு தனது நண்பர் சிவக்குமார் (34), அவரது மனைவி லதா, மகன் லோகேந்திரன், சகோதரர் முத்துமாணிக்கம், அவரது மகள் சோபியா மற்றும் உறவினர்கள் என 8 பேர் காரில் காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர். அங்கு பொழுது போக்கிவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் நாகை திரும்பினர்.
திரு-பட்டினம் பைபாஸ் சாலை, நாகை - காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென்று காரை வழிமறித்து, நீங்கள் யார்? என்று கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சரமாரி தாக்குதல்
இதில் ஆத்திரமடைந்த கும்பல், வினோத்தை தாக்கியது. இதை தடுக்க வந்த சிவக்குமார், அவரது மனைவி லதா, முத்துமாணிக்கம் ஆகியோரையும் அவர்கள் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில் காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வலைவீச்சு
விசாரணையில், வினோத் தரப்பினரை தாக்கியது திரு-பட்டினம் போலகம் புதுகாலனியை சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர்கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.