ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்
|சவ ஊர்வலத்தில் நடனம் ஆடிய தகராறில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
சவ ஊர்வலத்தில் நடனம் ஆடிய தகராறில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சவ ஊர்வலத்தில் நடனம்
புதுச்சேரி வாணரப்பேட்டை ராசுஉடையார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 28) ஆட்டோ டிரைவர். திப்புராயப்பேட்டையை சேர்ந்த இவரது உறவினர் ஜான் சம்பவத்தன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது சவஊர்வலத்தில் அடிக்கப்பட்ட மேளத்திற்கு ஏற்ப இஸ்ரவேல் தனது நண்பர்கள் வேலு, வின்சென்ட் ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது திப்புராயப்பேட்டையை சேர்ந்த கார்த்தி, பாலா, அசோக் ஆகிய 3 பேரும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினர்.
2 பேர் மீது தாக்குதல்
ஊர்வலம் புதிய துறைமுகம் அருகே சென்ற போது அவர்கள் சாலையை முழுவதும் மறைத்து நடனம் ஆடியபடி சென்றனர். இஸ்ரவேல் அவர்களிடம் ஓரமாக வரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி, பாலா, அசோக் ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்லால் அவரை தாக்கினர். இதில் இஸ்ரவேலின் தலை, கைகளில் காயம் ஏற்பட்டது. இதனை தடுத்த அவரது நண்பர் வேலுவையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
3 பேர் கைது
இதில் படுகாயம் அடைந்த இஸ்ரவேல், வேலு ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, பாலா, அசோக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.