மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
|கோட்டுச்சேரிஅருகே குழந்தைக்காக சுட்டி டி.வி. வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோட்டுச்சேரி
குழந்தைக்காக சுட்டி டி.வி. வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடும்ப தகராறு
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த பாப்பையன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மவிஜயா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் பாப்பையனுடன் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு பத்மவிஜயா வந்துவிட்டார். இந்த நிலையில் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச்செல்ல பாப்பையன் மாமியார் வீட்டுக்கு வந்தார். அவர் அங்கேயே தங்கி இருந்து, வேலைக்கு சென்று வந்தார்.
கொலை மிரட்டல்
நேற்று வீட்டில் பாப்பையன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது குழந்தை சுட்டி டி.வி. வைக்கும்படி கூறினார். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் பாப்பையன் சேனலை மாற்றியபடி இருந்தார்.
இதை கவனித்த பத்மவிஜயா, குழந்தைக்கு ஆதரவாக சுட்டி டி.வி. வைக்குமாறு கணவரிடம் கூறினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாப்பையன், பத்மவிஜயாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திரு-பட்டினம் போலீசில் பத்மவிஜயா புகார் அளித்தார். அதன்பேரில் பாப்பையன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.