< Back
புதுச்சேரி
சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல்
புதுச்சேரி

சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஒப்புதல்

தினத்தந்தி
|
21 Oct 2023 7:57 PM IST

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா பதவி நீக்கத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரத்தில் 10 நாட்களாக இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.

புதுச்சேரி

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

பதவி நீக்கம்

புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சந்திரபிரியங்காவின் நடவடிக்கை, செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி அவரை பதவிநீக்கம் செய்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கடந்த 8-ந்தேதி கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார்.

இதை அறிந்துகொண்ட சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதற்கான கடிதத்தை கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அனுப்பிவைத்தார். இதனால் அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டாரா? அல்லது ராஜினாமா செய்தாரா? என்ற குழப்பம் நிலவியது.

கவர்னர் விளக்கம்

இதற்கிடையே சென்னையில் பேட்டியளித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பதவியிலிருந்து சந்திரபிரியங்கா நீக்கப்பட்டார் என்றும் இதுதொடர்பான கடிதம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த 10 நாட்களாக இந்த கடிதம் மத்திய அரசினால் ஏற்கப்படாமல் இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்ததால் புதுவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் முடிவினை மத்திய அரசு ஏற்காததால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும் முதல்-அமைச்சருக்கு மத்திய அரசு மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளும் வலியுறுத்தினார்கள்.

ஜனாதிபதி ஏற்பு

இந்தநிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறவும் என்.ஆர்.காங்கிரஸ் முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால் இதற்கெல்லாம் பதில் எதுவும் தெரிவிக்காமல் எப்போதும் போல் முதல்-அமைச்சர் ரங்கசாமி மவுனம் காத்து வந்தார்.

ஏற்கனவே கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறிய நிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரசும் வெளியேறினால் அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று பா.ஜ.க. கருதியதாக தெரிகிறது.

இதன் எதிரொலியாக அமைச்சர் பதவியில் இருந்து சந்திரபிரியங்காவை நீக்கிய முதல்-அமைச்சரின் கடிதத்துக்கு, மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. சந்திரபிரியங்காவின் பதவி நீக்க நடவடிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

புதுச்சேரி அரசுக்கும் இதுதொடர்பான கடிதம் இன்று பிற்பகலில் அனுப்பி வைக்கப்பட்டது.

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

அமைச்சரை பதவி நீக்கம் செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த பிரச்சினையில் கடந்த 10 நாட்களாக இருந்து வந்த பல்வேறு யூகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அமைச்சர் பதவி பறிக்கப்பட்டாலும், சந்திர பிரியங்கா நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இனி தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்