சட்டசபையில் பிரதமர் மோடிக்கு பாராட்டு
|சந்திரயான் மூலம் உலக அளவில் வரலாற்று வெற்றி பெற்று விட்டதால் புதுவை சட்டசபையில் பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி
சந்திரயான் மூலம் உலக அளவில் வரலாற்று வெற்றி பெற்று விட்டதால் புதுவை சட்டசபையில் பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிரதமருக்கு பாராட்டு
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி முடிந்த நிலையில் இன்று மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. சபை நடவடிக்கைகளை சபாநாயகர் செல்வம் திருக்குறளை வாசித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் செல்வம் சட்டசபையில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுவை மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கி, வளர்ச்சி பணிகள் மக்கள் நலன் கருதி செய்யப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வருகிறது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் அரசை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி இந்த ஆண்டே செயல்படுத்திட நடவடிக்கை எடுத்த கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் மத்திய அரசு, அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அதிகாரிகளுக்கு என் சார்பாகவும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சார்பாகவும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் உலக அளவில் முதன்முதலாக நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த வரலாற்று வெற்றியை கொண்டாடுவதில் நாம் பெருமை கொள்வோம்.
இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் வெற்றிக்கு ஏராளமான பெண் விஞ்ஞானிகள் பங்களித்திருப்பதை கண்டு பெருமிதம் கொள்வதோடு இது வரும் ஆண்டுகளில் பல ஆர்வமுள்ள இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும்.
பிரதமர் மோடி எப்போதும் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறார். சந்திரயான்-3 வெற்றி, பிரதமர் மோடியின் ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்ற தெளிவான அழைப்புக்கு மிகப்பெரிய சான்றுகளில் ஒன்றாகும்.
சந்திரயான்-3 திட்டத்தின் வரலாற்று வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விஞ்ஞானிகளுக்கும் இந்த வரலாறு சாதனை படைக்க உறுதுணையாக இருந்த நமது பிரதமர் மோடிக்கும் சட்டசபை பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
ஜி-20 உச்சி மாநாடு
ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருந்தது. ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாராட்டி செய்தி வெளியிட்டது நம் அனைவருக்கும் பெருமையான ஒன்றாகும். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிரதமர் மோடிக்கு என் சார்பாகவும் இந்த பேரவையின் சார்பாகவும் நன்றியையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் குறிப்பிட்டார்.
மவுன அஞ்சலி
புதுவை சட்டசபை கூட்டத்தின் முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பழனிநாதன் ஆகியோருக்கும், ,மேலும் மொராக்கோ நிலநடுக்கம், லிபியா புயலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 2 நிமிடம் எழுந்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.