போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|காரைக்காலில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட என்.சி.சி. மற்றும் தனியார் மறுவாழ்வு மையம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. காரைக்கால் பஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, மாதா கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நிறைவுபெற்றது.
இந்த ஊர்வலத்தில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார், தேசிய மாணவர் படை கர்னல் ஜோஷி, மதுபோதை மறுவாழ்வு மைய செயலாளர் மகேஸ்வரி மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.